சரியான கட்டுநரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சரியான கட்டுநரைத் தேர்ந்தெடுத்துவிட்டால், வீட்டை வாங்குவதில் பாதி வேலை முடிந்துவிட்டதாக அர்த்தம். ஆனால், பொதுவாக வீடு வாங்குபவர்கள் இந்த அம்சத்தைவிட பட்ஜெட், இடம் போன்ற விஷயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

வீடு வாங்குவது என்பது முதலீடு செய்வதைவிடப் பெரிய விஷயம். அதை ஒரு லட்சியக் கனவாகத்தான் பலரும் நினைக்கிறார்கள். அதனால் வீடு வாங்கும்போது கட்டுநர்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் முக்கியமான விஷயம்.

இந்தக் கட்டுநரால் நாம் விரும்புவதை அளிக்க முடியுமா? அவர் பழைய திட்டங்களைச் சரியான நேரத்தில் முடித்திருக்கிறாரா? அவர் தரமான கட்டமைப்புகளை உருவாக்குகிறாரா என்பது போன்ற கேள்விகளுக்குக் கட்டுநரைத் தேர்ந்தெடுப்பதற்குமுன் விடை தேட வேண்டியது அவசியம்.

சரியான கட்டுநரைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்

முன்னுரிமைகள்
சில கட்டுநர்கள் குறைந்த விலை வீடுகளைக் கட்டுவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். சில கட்டுநர்கள் விலையுயர்ந்த வீடுகளைக் கட்டுவதில் வல்லுநர்களாக இருப்பார்கள். அதனால், உங்கள் பட்ஜெட்டுக்குள் எந்தக் கட்டுநர்கள் திட்டங்களை வழங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். அத்துடன், அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்க போகிறீர்களா, வில்லா வாங்கப் போகிறீர்களா என்பது போன்றவற்றையும் தீர்மானித்துவிட்டுக் கட்டுநரை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.

அனுபவம்
நீங்கள் எந்த மாதிரி வீட்டை வாங்க நினைக்கிறீர்களோ, அந்தத் திட்டங்களை வழங்குவதில் அனுபவம் இருக்கும் கட்டுநர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியாக இருக்கும். கட்டுநர்கள் சிலர் வில்லாக்கள் கட்டுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிலர் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுவதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால், நீங்கள் எந்த மாதிரி வீட்டை வாங்க நினைக்கிறீர்களோ, அதற்கு ஏற்ற கட்டுநரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

கட்டுநரைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுநரின் திட்டங்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் மாநிலத்தின் RERA இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலைப் பாருங்கள். கட்டுநரின் இணையதளத்தில் ஐஎஸ்ஓ சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் திட்டத்துக்கு ‘CRISIL’, ‘CARE’ போன்ற தரவரிசைப் பட்டியலில் சான்று அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கவும். கிரடாய்(CREDAI), இந்திய கட்டுநர்கள் சங்கம் (BAI) போன்றவற்றில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுநர் உறுப்பினராக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பின்புலம்:
பிரபலமான ரியல் எஸ்டேட் தளங்களில் கட்டுநர் பற்றியும், அவர் முடித்திருக்கும் திட்டங்களைப் பற்றியும் வந்திருக்கும் விமர்சனங்களைப் பாருங்கள். ஒருவேளை, இந்த அம்சங்களில் எல்லாம் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுநர் சரியாக இருந்தால், அவரின் கட்டுமானத் திட்டத்தை வாங்கிப் பார்த்து உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் பரிசீலிக்கலாம். கட்டுநர் உங்களிடம் அளித்த திட்டத்தையும் மற்ற முக்கிய ஆவணங்களையும் இறுதிசெய்வதற்குமுன், வழக்கறிஞர் ஒருவரிடம் கொடுத்து சரிபார்த்துகொள்வது முக்கியம்.

நேரில் சென்று பார்க்கவும்:
நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுநரின் பழைய திட்டங்களை நேரில் சென்று பார்த்து வாருங்கள். இதைப் பயன்படுத்தி உங்கள் கட்டுநரின் கட்டுமான தரத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கட்டுமானத்துக்குப் பிறகும் பராமரிப்பு:
திட்டம் நிறைவடைந்த பிறகும், பராமரிப்புச் சேவைகளை வழங்கும் கட்டுநர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உதாரணமாக, சில ஆண்டுகளுக்குத் திட்டத்தைப் பராமரித்த பிறகுதான், கட்டுநர் குடியிருப்புவாசிகள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களிடம் பராமரிப்பு சேவைகளை ஒப்படைக்க வேண்டும்.

கட்டுநரின் தரம்
ரியல் எஸ்டேட் துறையில், மதிப்புமிக்க கட்டுநரின் தரத்தை ஏ-கிரேட் மூலம் வரையறுப்பார்கள். ஆனால், இது அதிகாரபூர்மற்ற தர அமைப்புதான். இந்த கிரேட்ஸை வைத்துக் கட்டுநரை உங்களால் ஒரளவு சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும். கட்டுநரின் தரவரிசைப் பட்டியலை இக்ரா(ICRA-www.icra.in) இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.